Saturday, December 13, 2008

சாவே வாழ்வாக....

விடியல் பிறக்குமென்று
நான் தினமும் விழிக்கின்றேன்
தவறாமல் விடிகிறது விடியல்
வெறும் பொழுதுகளாய் மட்டுமே
விடியாமலேயே இருக்கிறது வாழ்வு
நான் ஜனித்த தேசத்தில்

ஊர் பெயர் தாங்கிய சாலைகளில்
போவது எங்கென்று தெரியாமல்
அங்கும் இங்கும் அலைகின்றோம்
முகவரி தொலைத்த பயணியைப்போல
சொந்த நாட்டின் நாடோடிகளாய் .........

காடுகள்தான் எங்கள் மறைவிடம்
மரநிழல்தான் எங்கள் வீடுகள்
கொல்லும் குண்டுகள் மழைப்பொழிவு
வெடி ஒசைகள்தான் எம் தாலாட்டாய்
தினம் மரணத்தை வென்று மீள்கிறோம்.......

ஈதல் இசைபட வாழ்தல் என்பதாம்
தமிழனின் சிறப்பு பண்பாடு
சாதல், அதனிலும் வாழ்வைத் தேடல்
ஈழத் தமிழனின் சாபக்கேடாய் இன்று
சாகாமல் தினம் செத்து வாழ்கிறோம் .......

ஆறடி நிலம்கூட சொந்தமின்றி
அழுகிய பிணங்களாய் அடக்கமாகிறோம்
கதறி அழவும் நேரமின்றி - நெஞ்சில்
சோகம் சுமந்து வாழ்கிறோம்
ஆறுதல் கூற யார் வருவாரோ?

தூக்கம் மறந்த நாட்கள் மறந்து
விழிகள் மூடி உறங்க மறுக்கிறது
மூடிய விழிகள் திறக்க மறுத்தால்
மரணம் வென்றதாய் அர்த்தம் கொள்ளும்
வேதனை கதைதான் எங்கள் வாழ்வு...........

No comments: